Wednesday, August 20, 2008

இங்கேயும் ஒரு சொர்க்கம் - பதிப்பகத்தார் பார்வையில்!


சேதுக்கரை என்ற தென்தமிழ்நாட்டின் கடற்கரையை ஒட்டிய கிராமத்தில் நடக்கும் சம்பவங்களாகத் துவங்கும் இந்த நாவல் களம் உலக நாடுகளில் நடந்தேறும் சம்பவங்களுடன் கோர்க்கப்பட்டு விரிந்து செல்கின்றது.

எல்லா சாதிக் கலவரங்களும், இன மோதல்களும் ஒரு சில ஆதிக்க சக்திகளின் சுய லாபத்துக்காகவும் ஆதாயங்களுக்காகவும் நடைபெறுவனதான் என்பதை நாவலாசிரியர் மிகப் பிரமாதமாக புதினமாக்கி இருக்கின்றார். சமூக அக்கறையுடன் உண்மையாகவும், நீதிக்காகவும், தேசத்திற்காகவும் நின்று போராடும் கதாபாத்திரங்களை உயிர்ப்புடன் வார்த்தளித்துள்ளார்.

திடீர் பாய்ச்சலில் இந்தியா முன்னேறுவதற்கான விஞ்ஞானக் கண்டுபிடிப்பினை நிகழ்த்திய விஞ்ஞானியிடமிருந்து ஆய்வு ரகசியத்தைத் திருட முயலும் சதிகாரர்களிடமிருந்து அந்த புதிய கண்டுபிடிப்பை மீட்பதற்காகவும் தேசத்தின் இறையாண்மையைக் காப்பதற்காகவும் கதாநாயகன் அருண் நடத்தும் போராட்டம் 'கத்திமேல் நடப்பதாக' அமைந்து மெய்சிலிர்க்க வைக்கின்றது.

ஒரே சமயத்தில் புலனாய்வுக் கதையாகவும், சமூக நாவலாகவும், அறிவியல் புனைகதையாகவும் கதை வளர்ந்து பின்னிப் பிணைந்து ஒவ்வொரு அத்தியாயத்திலும் எதிர்பார்ப்பை அதிகரித்து ஆவலைத்தூண்டும் விதத்தில் சிறுவர் முதல் பெரியவர் வரை படிக்கத்தகுந்த நாவலாக நாவலாசிரியர் படைத்துள்ளார்.

இது மிக நீண்ட கால உழைப்பில் உருவானதென்றுகருதத்தக்க நல்ல நாவலாகும். அருண், தாரிணி, பத்மநாபன் முதலான கதாபாத்திரங்கள் நம் மனதில் நின்று என்றும் வாழும்பான்மையுடையன.

இந்நாவலாசிரியரின் முதல் நாவலான "கனவு கிராமம்" ஏற்கனவே தமிழக அரசின்புதினத்திற்கான முதல் பரிசை பெற்றுள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளிவரும் இவரின் நாவலான "இங்கேயும் ஒரு சொர்க்கம்" பல பரிசுகளைப் பெறுவதுடன் தமிழ் வாசகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெறுமென நம்புகின்றோம். இந்நாவலை வெளியிட வாய்ப்பளித்த ஆசிரியருக்கு எமது உளமார்ந்த நன்றி.

- பாவை பப்ளிகேஷன்ஸ்

விடை தேடும் பயணம்

பாரதி கண்ட கனவாம் "சிங்களத் தீவினுக்கோர் பாலம்"

நனவாக ஒரே வாரம் !

காஷ்மீர் - கன்னியாகுமரி அல்ட்ரா மாடர்ன் நெடுஞ்சாலை

போட ஒரே மாதம் !

கங்கா - காவேரி அதி நவீன இணைப்புக் கால்வாய்

அமைக்க ஒரே ஒரு வருடம் !

அடுத்த வருடம் பாருங்களேன் விண்ணிலிருந்து பார்ப்பவர்களுக்கு, நம் பூமியில் சீன நெடுஞ்சுவர் மட்டுமல்ல, கங்கா - காவேரி இணைப்புக் கால்வாயும் தெரியும் !

- என வெற்றி முழக்கமிட்ட விஞ்ஞானியை...

செந்தீயின் கோர நாக்குகள் விழுங்க முயல...

அவர் கதியை அறிய இந்திய நாடு மட்டுமல்ல உலகமே பதற்றத்தில் துடித்தது.

விடை தேடும் ஒரு பயணமாக "இங்கேயும் ஒரு சொர்க்கம்" நாவலைக் கையில் எடுப்போம்...

புத்தம் புதிய விஞ்ஞானக் கருத்துக்களை நாடி நாமும் ஒரு விமானியாக,

பிரான்சில் - பாரிஸ், மார்சைல்ஸ், லியான், கார்சிகா தீவு,

இந்தியாவில் - தூத்துக்குடி, சென்னை, பெங்களூரு, என விமானத்தில் வலம் வருவோம் !

விரைவில் இந்நாவல் வாசகர்களின் கையில் !

பறக்கத் தயாராவோம் !

வெளியீடு :

பாவை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்.,

17 / 142, ஜானி ஜான் கான் சாலை,

இராயப்பேட்டை,

சென்னை - 600 014

தொலைபேசி : 91 - 44 - 28482441 / 28482973

என்னுடைய எழுத்துலகம்...

எனது கல்லூரி பட்டப் படிப்புக்கு பிறகு என் இளமைக்காலத்தை புத்தக நிலையங்கள், நூலகங்கள் என வருட கணக்கில் செலவிட நேர்ந்தது...

வளமான நூல்கள், போதுமான நேரம், சிந்திக்க இதமான சூழல் எனில், அச்சிந்தனைச் செழிப்பில் நம் கற்பனைத் திறன் கருக்கொள்ள இயல்பு போலும். அத்தகைய இன்சூழலில் ஏதாவது ஒன்றை எழுதவேண்டும் என்ற எண்ணம் என்னுள்ளும் முகிழ்த்தது...

ஒவ்வொருவருக்கும் அவர்கள் எழுத்து நடனமாட, அரங்கம் தேர்ந்த ஒன்றாகும் களம் புதுமையாகவும் இருக்க விரும்புவது இயற்கையே...

அத்தகைய தேடுதலின் போது ஆங்கில நாவல்களை ஒப்பிடுகையில் தமிழில் பயண நூல்களையும் மொழிபெயர்ப்பு நூல்களையும் தவிர்த்து வெளிநாடுகள் மற்றும் விஞ்ஞானம் பற்றிப் பேசிய தமிழ் நூல்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்...

இது என் மனதை நெருடியதன் தாக்கமே "கனவுக் கிராமம்" எனும் நாவல் மலர காரணமாயிற்று...

என்னுடைய எழுத்துலக பயணத்திற்கு இதுவே முதல் வித்து...

அடுத்து தினத்தந்தியில் நாற்றாக வெளிவந்தது "மனிதாபிமானம்" என்ற சிறுகதை...

வரவிருக்கும் எனது இரண்டாவது நாவலான "இங்கேயும் ஒரு சொர்க்கம்" கிளைத்துப் பரவ வாசக அன்பர்களின் அபிமானம், பேருதவி புரியும் என எதிர்பார்க்கிறேன்...